Wednesday, April 22, 2020

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் சிறுபோக வேளாண்மைச் செய்கையில் ஆர்வம்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )



இலங்கையின் நெல் உற்பத்தியில்  பெரும் பங்கினை அம்பாறை மாவட்டமே நிறைவு செய்கின்றது. வருடத்தில் பெரும்போகம் , சிறு போகம் என இரண்டு போகங்கள் வேளாண்மை செய்யக்கூடிய விளைநிலங்கள் அதிகளவில் காணப்பட்டபோதிலும் சில இடங்களில் ஒரு போகமே வேளாண்மை செய்கையில் ஈடுபடுத்தப்படுகின்றது. அத்தோடு மேட்டு நிலங்களில் சோளம் உட்பட ஏனைய மரக்கறி பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையான கொரணா வைரசு தாக்கத்திலிருந்து எமது நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எந்தவிதமான தடங்கலுமின்றி  சிறுபோக வேளாண்மை செய்கையில் ஈடுபட  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் விவசாயிகளுக்கு வயலுக்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
மழை வெயில் என்று பாராது தம் உடம்பை வருத்தி பொருளாதாரத்தில் மிகவும் தாழ் நிலையில்  தமது ஜீவனோபாயத்தை  மேம்படுத்துவதற்காக அன்றாடம் செத்து மடிகின்ற  எமது நாட்டின் முதுகெலும்புதான் இந்த விவசாயிகள்.. இவர்கள் சேற்றில் கால் வைக்கா விட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது.இந்த கஸ்டமான நிலமையிலும் கூட  விவசாயிகளின் தியாகம் போற்றத்தக்க விடயமாகும்.
. விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு  தமது விவசாய நடவடிக்கைகளை மேலும் வலுவுட்டும் வகையில்  கடந்த காலங்களில் மானிய விலை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த உரமானது  கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விவசாயிகளுக்கு அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஸ அவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைய தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுபோகத்திலிருந்து இலவசமாகவே  கமநலசேவை மத்திய நிலையம் விவசாய அமைப்புகளினூடாக  உரத்தினை வினியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. இதே வேளையில் வயல் நிலங்களில் வேளாண்மையுடன் போட்டியிட்டு வளர்ந்து நெல் விளைச்சலை குறைக்கும் களைகளை மனிதவலுவை பயன்படுத்தயும் களைநாசினிகளை விசிறியும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக அதிகளவு பணத்தை செலவிட வேண்டிய நிலமையும் ஏற்படும். அதே போன்று கதிர்பறியும் காலத்தல் நோய்ப்பீடைகளின் தாக்கத்திற்கும்  பயிர்கள் உள்ளாகலாம். விவசாயத்தில் இலாபமும் கிடைக்கலாம் எதிர்பாராத விதமாக நஸ்டமும் ஏற்படலாம்.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது 90 வீதமான வயல்நிலங்களில் விதைப்பு வேலைகள் நிறைவு பெற்றுள்ளது.இம்முறை மாவட்டத்தல் 68,000 ஹெக்டேயரில் சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.அபுல் கலீஸ் தெரிவித்தார். சிறு போகத்திற்கான நீரை இங்கினியாகல டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்திலிருந்து நீர்ப்பாசண திணைக்களத்தின் மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கையினை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எஸ்.பண்டாரநாயக மேற்கொண்டு வருகின்றார்.
இதே வேளை ஓய்வுதியம் பெறும் விவசாயிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இந்த காலகட்டத்தில் ஜீவனோபாயத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் பெறும் விவசாய ஓய்வுதியம் போதாமை காரணமாக ஓய்வுதியத்தினை 5000 ரூபாவாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுணர் திருமதி அனுராதா ஜகம்பத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.



No comments:

Post a Comment