Saturday, March 9, 2019

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் சட்ட அந்தஸ்து தொடர்பாக நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்பை ஏற்று கொள்ள தயார் கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுமான வஃபா பாருக்





( நமது நிருபர்)

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் சட்ட அந்தஸ்து தொடர்பாக நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்பை ஏற்று கொள்ள தயார்


கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுமான வஃபா பாருக் 

இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் ஊடகவியலாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை  காலை சந்தித்து சமகால அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோது இவர் தெரிவித்தவை வருமாறு:-
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் அரங்கில் அடிக்கடி பேசப்படுகின்றமையை நாம் செவிமடுக்க முடிகின்றது. இவ்விடயத்தில் எமது கட்சியின் நிலைப்பாடு என்னவென்றால் இப்பிரதேச செயலகம் சட்ட அந்தஸ்து உடையதா? என்கிற பிரதான கேள்விக்கு முதலில் விடை காணப்பட வேண்டும்.
ஏனென்றால் இது ஆயுத முனையில் உருவாக்கப்பட்டது. அத்துடன் இற்றை வரை இப்பிரதேச செயலகம் வர்த்தமானியில்  பிரகடனம் செய்யப்பட்ட ஒன்று அல்ல. ஆகவேதான் சட்டவிரோத பணிமனை ஒன்று சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றது என்று நாம் குற்றம் சாட்டுகின்றோம். கொழும்பு நீதிமன்றத்தில் இப்பிரதேச செயலகத்தின் சட்ட அந்தஸ்து தொடர்பாக வழக்கு இடம்பெற்று வருகின்றது. இப்பிரதேச செயலகம் சட்ட அந்தஸ்து உடையதா? இல்லையா என்கிற தீர்ப்பை நீதிமன்றம்தான் வழங்க வேண்டும்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை கொடுக்கப்படத்தான் வேண்டும். ஆனால் கல்முனையில் முஸ்லிம் பெரும்பான்மை பாதிக்கப்படாத வகையில்தான் இது நடக்க வேண்டும். 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்முனை பட்டின சபையும், மூன்று கிராம சபைகளும் காணப்பட்டு வந்தன. ஆனால் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் இவை இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்  சட்ட வலு அற்றதாக்கி ரத்து செய்யப்பட வேண்டும். அவ்வாறு நடக்கின்றபோது கல்முனையில் முஸ்லிம் பெரும்பான்மைக்கு பாதிப்பு நேராத வகையில் சாய்ந்தமருது மக்களுக்கான உள்ளூராட்சி சபை இயல்பாகவே கிடைத்து விடுகின்றது. அதே போல இவ்விதம் நடக்கின்றபோது கல்முனையில் தமிழ் மக்களுக்கு பிரதேச செயலகம் ஒன்றும் சுமூகமான முறையில் சாத்தியம் ஆகின்றது.

அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளில் கவனம் செலுத்துவதே இல்லை. இதனால்தான் புதிய முஸ்லிம் கட்சிக்கான தேவை ஏற்பட்டு கிழக்கு தேச விடுதலை இயக்கம் உதயமாகி உள்ளது. கிழக்கை வடக்குடன் இணைத்து முஸ்லிம்களின் அரசியல் பலத்தை குறைக்க செய்வதை கிழக்கு தேச விடுதலை இயக்கம் ஒருபோதும் அனுமதிக்காது.

No comments:

Post a Comment