Wednesday, July 29, 2015

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் தமிழ் கிராமங்கள் புறக்கணிப்பு - முன்னாள் அமைச்சர் தயாரெட்ண புலம்பல்

அக்கரைப்பற்றுக்கு அப்பால் தென்பகுதியிலுள்ள தமிழ்க்கிராமங்கள் பல்லாண்டுகாலமாக திட்டமிட்ட அபிவிருத்தியில்லாமல் சோபையிழந்து காணப்படுகின்றன. ஒரு விதத்தில் புறக்கணிப்பு பாரபட்சம் என்று கூட சொல்லலாம். இனி அது ஒருபோதும் இடம்பெறாது.
இவ்வாறு ஜ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்னா தெரிவித்தார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து இன்னமும் திருக்கோவில் வினாயகபுரப்பகுதியில் வாழும் தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடியாறு கிராமங்களைச்சேர்ந்த தமிழ்மக்களை ஜ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்னா நேற்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 ஜ.தே.க.திருக்கோவில் இணைப்பாளர் கே.நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் அவருடன் பி.தயாரத்னா எம்.பியின் செயலாளர் சுனில் இணைப்பாளர்களான வீ.கிருஸ்ணமூர்த்தி வி.ஜெயச்சந்திரன் ஏஆனந்தன் ஆகியோர் உரையாற்றினர்.
அங்கு தயாரத்னா மேலும் உரையாற்றுகையில்:
எனது நிதியில் முடிந்தளவு உதவியுள்ளேன். சுகாதார அமைச்சராகவிருந்தபோது திருக்கோவில் வைத்தியசாலைக்கு கட்டடம் வழங்கினேன். தங்கவேலாயுதபுரம் போன்ற மீன்குடியேற்ற கிராமங்களுக்கு மின்சாரவசதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன். கரையோரப்பிரதேச தமிழ்மக்களுக்கு உரிய எம்.பி.இல்லாத காரணத்தினால் பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளேன்.
இம்முறை ஜ.தே.கட்சி ஆட்சியமைக்கப்போகிறது. ஆளும்கட்சியில் உங்களில் ஒருவர் எம்.பி.யாகினால் பெரும் வரப்பிரசாதமாகவிருக்கும். முதலில் உள்ளுராட்சிசபைத்தேர்தலுக்கு ஜ.தே.கட்சி சார்பில் முகம்கொடுங்கள். பிரதேச சிறுசிறு தேவைகளை பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.
இலங்கை வரலாற்றில் மூவின மக்களும் ஏகோபித்தமுறையில் குறிப்பாக தமிழர் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து சாதி இன மத பேதங்களுக்கு அப்பால் தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு ஜனாதிபதி இன்றைய மைத்ரிபால சிறிசேன மட்டுமே.
நான் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஜ.தே.கட்சி சார்பில் போட்டியிடவுள்ளேன். கடந்த 38வருடகாலமாக பாராளுமன்றத்தில் இருந்துவருகிறேன். இம்முறையும் வருவேன். அமைச்சராவேன்.அதற்கு உங்களது ஆதரவு கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை. என்றார்.
 
அவரது இணைப்புச்செயலாளர் வி.ஜெயச்சந்திரன் பேசுகையில்;
பிரதமரின் விருப்புக்கிணங்கவே அமைச்சர் தயாரத்னா மீண்டும் ஜ.தே.க.வில் இணைந்தார். வரலாற்றில் அம்பாறை தமிழர்களுக்கு குரல்கொடுத்துவருகின்ற ஒரேயொரு சிங்கள அரசியல்வாதி என்றால் அது தயாரத்னா ஒருவரே.
அவருக்கு பொய்பேசத் தெரியாது படிவம் நிரப்பி ஏமாற்றத்தெரியாது. வட்டமடு கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்திற்காக இன்றும் குரல்கொடுப்பவர் அவரே தவிர தமிழ் அரசியல்வாதிகளல்ல.எனவே உங்களது ஆதரவு தேவை. என்றார்.

அரசியல்விவகார இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி பேசுகையில்;:
சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டே யிருக்கிறார்கள்.அதற்கு தலைiயாய காரணம் எமது தமிழ் அரசியல்வாதிகளே. நான் பிழைப்புக்காக அரசியல் செய்பவனல்ல.சமுகத்திற்கு ஏதாவது செய்யலாமென்பதற்காகவே அரசியலை நேர்மையாக செய்கிறேன். இதுவரை நாம் தெரிவுசெய்த தமிழ்அரசியல்வாதிகள் எமது மாவட்டத்திற்கு என்னசெய்தார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.கேட்டால் நாம் எதிர்க்கட்சியிலிருக்கின்றோம். நாம் என்னசெய்வது? என்பார்கள்.
ஏன் நீங்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியிலிருக்கின்றீர்கள்.மக்கள் சொன்னார்களா? இல்லையே. நீங்கள் தொடர்ந்து பிழைப்பு நடாத்தவேண்டும்.அதுதான்.இதற்கு இன்னமும் ஏமாற தமிழ்மக்கள் தயாரில்லை என்ற செய்தியை இம்முறை நீங்கள் சொல்லவேண்டும்.அதுவே எமது கோரிக்கை. என்றார்.

ஜ.தே.க.முக்கியஸ்தர் ஆனந்தன் பேசுகையில்:
நான் நாவிதன்வெளி பிரதேசசபையில் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட்டு உப தவிசாளராக தெரிவானேன். ஆனால் அக்கட்சியின் இப்பிரதேச முகவர்கள் காட்டுகின்ற அட்டகாசம் அதிகம்.  எனது வேண்டுகோளின்பேரில்  அமைச்சர் தயாரத்னா ஒதுக்கிய 1கோடி ருபாவை அப்போதைய தவிசாளர் கலையரசன் தன்னிச்சையாக செலவழித்தார். அவர் செய்த திருவிளையாடல்கள் அதிகம். அவற்றைத் தட்டிக்கேட்டால் துரோகி என்பார்கள். அவரது ஊழல்களை  ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.
ஒரு தடவை அம்பாறை ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் வட்டமடு காணிப்பிரச்சினை எடுக்கப்பட்டபோது பியசேன எம்.பி. மெதுவாக நழுவிவெளியேறினார். நீங்கள் தெரிவுசெய்த இரு மாகாணசபை உறுப்பினர்களும் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். ஆக அமைச்சர் தயாரத்னா மட்டுமே குரல்கொடுத்தார்.
த.தே.கூட்டமைப்பினர் அரசியல் நடாத்துவதற்கு தமிழ்மக்கள் தொடர்ந்து பிரச்சினையிலே இருக்கவேண்டும்.அதுதான் அவர்களது தேவை.இல்லாவிடில் 100நாள் வேலைத்திட்டத்திற்குள் தமிழ்க்கைதிகளை விடுவித்திருக்க முடியாதா? செ;சயமாட்டார்கள்.அவர்கள் வெளியேவந்தால் இவர்களுக்கு அரசியல்செய்யமுடியாது.எனவே இன்னமும் ஏமாறாது தயாரத்னாவிற்கு வாக்களியுங்கள் என்றார்.
மக்கள் தமது தேவைகளை பிரச்சினைகளையும் முன்வைத்துப் பேசினர்.

No comments:

Post a Comment