Sunday, July 26, 2015

பொதுத் தேர்தல் நிறைவு பெற்றதும் சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கனவான தனியான நகரசபையை பெற்றுத்தருவேன் - ஹரீஸ் உறுதி



பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டதால் கைகூடாமல் போன சாய்ந்தமருதிற்கான நகரசபையினை தேர்தல் முடிவுற்றதும் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்
இவ்வாறு சாய்ந்தமருது ஸீபிரீஸ் ரெஸ்ரோரண்டில் .அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் ( 24 ) உரையாற்றிய முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாய்ந்தமருது பிரதேச நகரசபை சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றது. இது சம்பந்தமாக  எதிர்த்தரப்பினர் மக்கள் மத்தியில் இந்த விடயத்தை இம்முறை நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தூக்கிப் பிடிக்கக்கூடும் . ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் நானும் மிகத் தெளிவான நிலைப்பாட்டை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரோடு கொண்டிருந்தோம்.
பள்ளிவாசல் நிர்வாகம் சாய்ந்தமருதிற்கென தனியான நகரசபையொன்று தேவையென்ற கோரிக்கையை முன் வைத்த போது இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அந்த பள்ளிவாசல் நிர்வாத்தினரை சந்தித்து அந்த விடயத்தில் எந்தவித நழுவலும் மழுப்பலும் இல்லாமல் தெளிவாக இந்த நகரசபையை முழுமையாக ஆதரிப்பதுடன் இதனைப் பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பேன் என்ற வாக்குறுதியினை பள்ளிவாசல் காரியாலயத்தில் வைத்து அளித்திருந்தேன்.
அதன் பின்பு அதன் நிருவாகத்தினரை கொழும்பில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை சந்திக் வைத்து தலைவரினது ஆதரவினையும் ஒப்புதலையும் பெற்று இந்த நகரசபையை பெறுவதற்கான உத்தியோக புர்வ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையில் அவரது அமைச்சில் ஓர் உயர்மட்ட மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டில் சாய்ந்தமருதிற்கான நகரசபை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக் குழு பங்கேற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றவுப் ஹக்கீம் தலைமையில் நான் , ராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் , முன்னாள் பிரதியமைச்சர் தௌபீக் , கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் , உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் சென்றிருந்தனர். ஏனென்றால் அந்த நகரசபை கோரிக்கைக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக அத்தோடு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் உட்பட ஏனைய முக்கியஸ்தர்களும் அந்த மகாநாட்டில் பிரசன்னமாயிருந்தனர். அந்த நகரசபை கோரிக்கை அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே நேரம் நகரசபையை பிரகடனப்படுத்துவதற்கான ஒரு முறை இருக்கின்றது அதனை நாம் பின்பற்றி எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அமைச்சர் கரு ஜயசூரிய அவர்கள் தெரிவித்தார்கள். அந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்டு அதன் வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக  அமைச்சின் செயலாளர் இது சம்பந்தமான ஆவணங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்தும்  கிழக்கு மாகாண சபையிடமிருந்து பெற்றிருந்தார். சாய்ந்தமருதிற்கான நகரசபைக்கான வேலைகள் நடைபெற்றுவரும் போது துரதிஸ்டவசமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக அந்த நகரசபையினை பிரகடனப்படுத்த முடியாத நிலையொன்று தோன்றியது.
தேர்தல் காலங்களில் மக்களுக்கு வரப்பிரசாதமாக கொடுக்கின்ற எந்த நடவடிக்கையும் செல்லுபடியாகாது. அதாவது தொழில் வழங்குதல் , இடமாற்றம் செய்தல் , இவ்வாறான மக்களை கவருன்ற விடயங்கள் போன்றவையாகும்.
எனவே பொதுத் தேர்தல் முடிந்த கையோடு எமது கட்சி விட்ட இடத்திலிருந்து தமது நடவடிக்கைகளை தொடர்ந்து சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபையினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளும் என்பதனை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த ஊடகவியலாளர் மகாறாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் , முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உட்பட கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment