Saturday, July 25, 2015

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் முஹம்மட்டின் சாதனைக்கு முன்னாள் எம்.பீ.ஹரீஸ் வாழ்த்து

தேசிய ரீதியில் கணணி உருவாக்கல் போட்டியில் சாதனை படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் முஹம்மட்டின் சாதனை கல்முனைப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளது.

இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ,
இலங்கை முஸ்லீம்களின் தேசிய கல்விச் சொத்து என எல்லோராலும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பேசப்படும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி , விளையாட்டு மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் சாதனைகளை ஏற்படுத்தி வருவது இக்கல்லூரியின் பழைய மாணவன் என்ற ரீதியில் எனக்கு மிகவும் பெருமையளிக்கின்றது. இவ்வாறான இக்கல்லூரி பாசறையில் வளர்ந்த  எனக்கு அரசியலில் பிரகாசிக்க களம் அமைத்த வரலாற்றை என்னால் மறக்க முடியாதுள்ளது. இதற்காக  தியாக மனப்பாங்குடன் கடமையாற்றும் ஆசிரியர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.
பாடசாலை என்பது தனியே கல்வியில் மட்டும் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல கூடாது. பல்துறையிலும் மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மிகவும் சிறப்பாக மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வருகின்றது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகவும் சுறுசுறுப்பாக இரவும் பகலும் பாடுபட்டுழைக்கும் இக்கல்லூரியின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் ஆசிரியர்கள் , கல்விசாரா ஊழியர்கள் , உத்தியோஸ்தர்கள் , பெற்றோர் , நலன் விரும்பிகள் , பழைய மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பங்களிப்பு இக்கல்லூரிக்கு முழுமையாக கிடைப்பதனால் இக்கல்லூரி இன்று பலதுறைகளிலும் வளர்சியடைந்துள்ளது.
அண்மையில் ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய ரீதியில் மாலபே கெம்பஸில் ஒழுங்கு செய்திருந்த  தகவல் தொழில்நுட்ப போட்டியில் மூன்று சாதனைகளை ஏற்படுத்தியிருந்தமை , தேசிய ரீதியில்  கிறிக்கட் துறையில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை , கிழக்கு மாகாண ரீதியில் 5 தடவைகள் தொடர்ச்சியாக சதுரங்க போட்டியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு சாதனை ஏற்படுத்தியமை இங்கு நினைவு படுத்தக்கூடியனவாக உளள்ளது.
எனவே கல்லூரி மாணவர்களின் முயற்சிக்கும் வெற்றிக்கும் காரணகர்த்தாக்களாக விளங்கும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment