Friday, July 24, 2015

இடமாற்றம் வந்தது

இடமாற்றக் கடிதம் வந்து விட்டது
இனி நான் போக வேண்டும்

எல்லா வற்றையும் முன்னரே கட்டி
மூலையில் வைத்தது நல்லது

ஓரங்க நாடகத்தில் திரைக்குப் பின்னால்
உடை மாற்றுதல் போல
இந்த இடமாற்றம்
பாத்திரங்கள் பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு
நாடகத்தின்
சூத்திரத்தை நாம் அறியும் விளையாட்டு

இடமாற்றக் கடிதம் வந்து விட்டது
இனி நான் போக வேண்டும்

ஆயிரம் பேர் பார்வையாளர்
அவரவர்க்கு ஏற்றபடி அறிந்து கொள்வர்
பாத்திரத்தை
கைதட்டி ரசிப்பர் சிலர்
கல்லெறிவதும் உண்டு
இன்னும் கூவென்று கத்துவதும் கேட்கும்

இதையெல்லாம் தாண்டி என்னுடைய
வார்த்தை மட்டும் கேட்க வேண்டும்
நேத்திரமாய்
அது தான் என் பாத்திரமும்

எல்லாப் பாத்திரமும் ஒன்றுதான் எனினும்
பாத்திரமே படைத்துவிடல் காத்திரமோ

இது ஓரங்க நாடகம்
இந்த நாடக அரங்கில் நியதி ஒன்று உள்ளது
உன் நடிப்பு
உன் பிள்ளைகளும் மனையாளும் பார்த்திருப்பர்
ஆயிரம் பேரில் அவர்களும் இருப்பர்

கூட்டம் குதூகலித்து  கைதட்டும் போதும்
கல்லெறிந்தோ கூக்குர லிட்டோ
கத்துகின்ற போதும்
அவர்கள் மனதில் ஆயிரம் சிந்தனை ஓடும்
அவர் அறிவர்
பாத்திரமும் அது படும் பாடும்

இது ஓரங்க நாடகம்
இடமாற்றம் உடை மாற்றுதல் போல
திரைக்குப் பின்னால்

இடமாற்றக் கடிதம் வந்து விட்டது
இனி நான் போக வேண்டும்

தடுமாற்றம் எதற்கு
இந்த இடமாற்றக் கடிதம் ஒரு
திசை காட்டும் குறி தான்

திரைக்குப் பின்னால் நடப்பது
தெரிவதில்லை எவருக்கும்
கபன் உடை மாற்றம்
கடைசி இடமாற்றம்

- எச்.ஏ. அஸீஸ்

21 யூலை 2015

No comments:

Post a Comment