Sunday, July 26, 2015

அதிர்ந்தது அம்பாறை மாவட்டம் - உடைந்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை



அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஸாத் பதியுதீனின் திடீர் வரவால் மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களும் ஆதரவாளர்களின் வெள்ளத்தினால் நிரம்பி வழிந்தது.
மர்ஹும் அஸ்றப்பின் தேர்தல் வரலாற்றின் பின் கிழக்கு கண்ட மாபெரும் மக்கள் வெள்ளம்
கடந்த ஞாயிற்றுக் கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஸாத் பதியுதீன் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்காக வருகை தந்திருந்தார்.
மருதமுனை , நற்பிட்டிமுனை , கல்முனை , சாய்ந்தமருது , மாளிகைக்காடு , மாவடிப்பள்ளி , சம்மாந்துறை , நிந்தவுர் , ஒலுவில் , பாலமுனை , அட்டாளைச்சேனை , அக்கரைப்பற்று , பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் அமைச்சருக்கு வரலாறுகாணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் , சிறுவர்கள் , வயோதிபர்கள் , வாலிபர்கள் என்று முன்டியடித்துக் கொண்டு மாலையிட்டு , குரவை ஒலி வானைப்பிளக்க , பொல்லடி மற்றும் வான வேடிக்கைகளுடன் அமைச்சரை ஆதரவாளர்கள் தோளில் சுமந்த வண்ணம் வீதியெங்கும் சென்றனர். 1989 ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரைக்கும்  மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்றப் தேர்தல் கூட்டங்களுக்கு வருகை தந்த அந்த நினைவுகளை மீண்டும் ஞாபகமூட்டுவது போல் அமைந்திருந்தததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
காலகாலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய அம்பாறை மாவட்டத்தில் இப்படியான தேர்தல் காலத்தில் இவ்வாறான மாற்றமொன்று ஏற்பட்டிருப்பது தேர்தல் முடிவுகளில் எதிர்பாராத மாற்றத்தினை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் துசிய காங்கிரஸினதும் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
சாய்ந்தமருதிற்கு வருகை தந்த அமைச்சர் றிஸாத் பதியுதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களால் ஒழுங்கு செய்ப்பட்டிருந்த மாபெரும் வரவேற்பு ஊர்வலத்திலும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஊடகவியலாளர் மகாநாட்டிலும் கலந்து கொண்ட பின்னர் மருதமுனையில் வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் அலுவலக திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.
அன்றைய தினம் மாலை பொத்துவிலில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் எஸ்.எஸ்.பி.மஜீட் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் நிந்தவுரில் இடம்பெற்ற மாபெரும் வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்ட பின்னர் சம்மாந்துறையில் நள்ளிரவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் சமுத்திரத்தின் மத்தியிலும் உரையாற்றினார்.



No comments:

Post a Comment