Sunday, July 12, 2015

இடி விழும் காலம்

அங்கிருந்து அது பாய
இங்கிருந்து இது பாய
எங்கிருந்து எது தாவுதென
எண்ணித் தெளிவில்லை

திண்ணையில்
சின்னஞ் சிறுவர்
முடுக்கி விளையாடும்
கிறுக்கி போல
சுற்றுவதேன் என் மூளை

இவைகளெல்லாம்
எங்கிருந்து வந்துள்ளன
இந்த அளவு யார் இவற்றை
பெருக விட்டார்

ஒரு குருவி கொண்டுவந்து
போட்ட விதை
அதன் எச்சத்துடன் விழுந்ததாக
இவைகளெல்லாம்
நினைத்தனவோ

அது வளர்ந்து மரமாகி
அதன் கிளை முறிந்து
மரமாகி
அதன் வேர் அறுந்தும்
மரமாகி
விளைந்ததுவோ காடாகி

குருவி போட்ட விதை
கடுமையான விதை

உலுக்கி உலுக்கி பழம் பறித்து
உண்டு கொதுப்பிய பின்
விழுந்த விதை முளைத்தெழுந்து
மீண்டும் மரமாகி
பழம் கொடுத்து பழம் கொடுத்து

அங்கிருந்து அது பாய
இங்கிருந்து இது பாய
எங்கிருந்து எது தாவுதோ
அறியேன்

மெல்லத் தாவுங்கள்
மந்திகளே

இங்கு இடி விழுந்து போகும்
காடெரிந்து கருகிவிடும்


- எச். ஏ.அஸீஸ்

12 யூலை 2015

No comments:

Post a Comment