Tuesday, November 11, 2014

கல்முனை ஸாஹிரா மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நடவடிக்கை


( நமது நிருபர்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் க.பொ.த.சாதாரணதர வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுடனான
கலந்துரையாடலொன்றினை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருதுபெற்ற சாரணருமான ஏ.எம்.ஜெமீல் அண்மையில் கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்தார்.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் , சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் , க.பொ.த.சாதாரணதர பகுதித் தலைவர் செயின்தம்பி ஸியாம் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நிலஅளவையாளர் எம்.ஏ.றபீக் ,கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஸீ.எம்.முனாஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு கலந்து கொண்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கருத்து தெரிவிக்கையில் ,
கல்முனை வலயத்திலுள்ள பாடசாலைகளில் வருடம் தோறும் அதிகளவிலான மாணவர்கள் இக்கல்லூரியிலிருந்து க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அதாவது கிட்டத்தட்ட 350 மாணவர்கள் .அம்பாறை மாவட்டத்தில் பல சாதனைகளை இப் பரீட்சை மூலம் இக்கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்தினாலும் பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சை பெறுபேறு மதிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றது. 2013 ஆம் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 9 மாணவர்கள் சகல பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்றதுடன் இரண்டு மாணவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முதல் இரண்டு நிலைகளையும் பெற்றுள்ளனர். இது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.
எனினும் பரீட்சைகளில் சகல பாடங்களிலும் ” ஏ ” சித்திபெறும் மாணவர்களை பலதுறையினரும் பலவழிகளில் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் அதே நேரம் பரீட்சைகளில் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி எவரும் கவலைப்படுவதும் இல்லை , அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. அம் மாணவர்களில் பலர் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தோல்வியினை சந்தித்த பின்னர் நடுவீதிக்கு தள்ளப்பட்டு சமூகத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். இம் மாணவர்கள் அதி சிறந்த சித்திகளைப் பெறாவிடினும் ஓரளவிற்கேனும் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சாதாரண சித்திகளைப் பெறுவதற்கு பாடசாலை அதிபர்களும் , ஆசிரியர் சமூகமும் ,பாடசாலை  அபிவிருத்தி சங்கமும் , பழையமாணவர் சங்கமும் , பிரதேச அரசியல்வாதிகளும் , பள்ளிவாசல் பரிபாலனசபையினரும் , ஏனைய சமூகசேவை அமைப்புகளும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் சமூகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நாம் விளைவிக்கும் மிகவும் பெரிய துரோகமாகும்.
கல்முனைக்குடி , சாய்ந்தமருது , மாளிகைக்காடு , இஸ்லாமாபாத் மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து இப்பாடசாலைக்கு தரம் 10 இல் இணையும் மாணவர்களில் சிலர் பின்தங்கிய கல்வி நிலையில் இணைகின்றனர்.சில மாணவர்கள் ஸாஹிராக் கல்லூரிக்கு வந்த பின்னர் கல்வியின்பால் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர்.சில மாணவர்கள் பின்தங்கிய நிலையிலேயே தமது கல்வியினை தொடர்கின்றனர். இம் மாணவர்களை இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அடையாளம் கண்டு பரிகாரக் கற்பித்தலில் ஈடுபட வேண்டும். அதற்காக மற்றைய மாணவர்களிடமிருந்து பிரிப்பதென்பது பொருளல்ல. அம்மாணவர்கள் பாடங்களில் எந்தப் பகுதியில் பின்னிலையடைந்துள்ளார்கள் , அவர்களின் குடும்ப பின்னணி , அவர்கள் பழகும் நண்பர்கள் , பாடசாலை முடிந்தததும்  அவர்களின் செயற்பாடு போன்றவற்றை அறிந்து அவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடி இதற்கான பரிகாரத்தினை காண வேண்டும். இல்லையேல் அம் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் சித்தியடையத்தவறுவதனை யாராலும் தடுக்க முடியாது.
சில மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் , ஆசிரியர்களின் கடுமையான கண்டிப்பின் காரணமாகவும் வறுமை காரணமாகவும் கல்வியில் பினதங்கி இருக்கலாம் இம் மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஏனைய மாணவர்கள் போன்று செயற்படுவதற்கு நிச்சயம் ஆசிரியர்களால் முடியும். அரசியல் ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதியில் இக்கல்லூரியின் பழைய மாணவன் என்ற ரீதியில் என்னால் அதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தருவதுடன் அதற்கான உதவிகளையும் வழங்க முடியும். இம் மாணவர்களின் கல்வி ரீதியான பின்னடைவு சமூகத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக அமையக் கூடும். அவ்வாறான ஆபத்தான நிலைமையிலிருந்து எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.
என்று தெரிவித்தார்.





No comments:

Post a Comment