Thursday, December 29, 2011

சிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சை முடிவுகளில் சிங்கள பாடத்திற்கு தோற்றவில்லை!



அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரி மாணவிகள் இருவருக்கு உயர்தர பரீட்சையில் சிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சையில் தோற்றவில்லை என பரீட்சை முடிவுகள் கிடைத்துள்ளதால் மாணவிகள் இருவரும் அதிர்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசியக்கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான கலணி உத்தரா மற்றும் திலாணி சமரக்கோன் ஆகியோர் சிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சை முடிவுகளில் சிங்கள பாடத்திற்கு தோற்றவில்லை என முடிவுகள் கிடைத்துள்ளது.
பரீட்சைகள் முடிவடைந்து ஒரு வார காலத்தின் பின் சிங்கள பாட விடைப்பத்திரங்கள் இரண்டு கல்லூரியின் குப்பை கூடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு பரீட்சை மேற்பார்வையாளரினால் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவை விடைப்பத்திரங்கள் திருத்தப்படும் போது சேர்த்துக் கொள்ளப்படாமல் விடப்பட்டிருக்கலாம். இருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் மாணவிகளின் எதிர்காலத்தை வெகுவாக பாதித்துள்ளது. அதிகாரிகள் விடும் தவறினால் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ககை நடாத்தும் எங்களது பிள்ளைகளின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தெரிவித்தனர்.
மாணவியான நிலிணி திலாணி சமரக்கோன் அரசியல் பாடத்தில் ” பீ ” சித்தியையும் , பௌத்த நாகரீகத்தில் ” ஏ” சித்தியையும் பெற்றுள்ளதோடு சிங்கள பாடத்தில் தனக்கு ” ஏ ” அல்லது ” பீ ” கிடைக்குமென எதிர்பார்த்துள்ளதோடு , மற்றைய மாணவியான கலணி உத்தரா  தகவல் தொழில்நுட்பவியலில் ” பீ ” சித்தியும் அரசியலில் ” பீ ” சித்தியும் பெற்றுள்ளதோடு சிங்கள பாடத்தில் ” பீ ” சித்தி கிடைக்குமென எதிர்பார்த்ததாகவும் தெரிவித்தனர்.
பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய உத்தியோஸ்தர் அநாதரவாக கிடந்த விடைப்பத்திரங்கள் யாருடையது என பரீட்சை மண்டபத்தில் பரீட்சை முடிந்த உடனே கேட்டிருந்தால் அவை தங்களுடையது என கூறியிருந்திருப்போம் . இப்போது தோன்றியுள்ள பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியான  கலணி உத்தராவின் தந்தையான முச்சக்கர வண்டி சாரதி  சந்திரதாச தெரிவிக்கையில் அப்போது பத்திரிகைகளில் இந்த செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. இவ்விடைப்பத்திரங்கள் தனது மகளுடையது தான் என தெரியாமல் போய் விட்டது. பரீட்சை முடிவுகள் வெளியிட்ட பின்னர் தொலைபேசி மூலமாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்கவுடன் கதைத்தபோது இவ்விடயம் சம்பந்தமாக தான் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment